மக்களின் அன்றாட உணவு முறைகளில் கீரைகள், காய்கள், கிழங்குகள் இடம் பெற்று வந்தால் அதுவே பிணித் தடுக்கும் மருந்தாகவும் செயல்படும்.
இயற்கையாக பறித்த காய்கறி, கீரைகளை உண்டு வந்தால் அவைதான் உடலுக்குத் தகுந்தவாறு ஈர்க்கப்பட்டு நோயில்லா வாழ்வைக் கொடுக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கீரைகள், காய்கள் கிழங்குகளில், கிழங்குகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் காரட் பற்றி அறிந்து கொள்வோம்.
பொதுவாக காரட் மலைப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இது கிழங்கு வகைகளைச் சார்ந்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக காரட் பயன்படுகிறது. இதில் அதிகளவு உயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சமைத்தும் சாப்பிடலாம். அல்லது பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம். அதுபோல் ஜூஸ் செய்தும் அருந்தலாம். தற்போது காரட் ஜூஸ் மிகவும் பிரபலமாக உள்ளது.
காரட் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாகக் காணப்படும். 5 முதல் 10 செ.மீ. நீளம் உள்ள கிழங்காக இருக்கும். மண்ணுக்குள் பல சில்லடை வேர்களைக் கொண்டது.
குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் மிகவும் சிறந்த சத்து நிறைந்த உணவாக காரட் உள்ளது.
கண் பார்வை தெளிவு பெற:
காரட்டில் வைட்டமின் “இ’ சற்று அதிகம் நிறைந்துள்ளது. அதுபோல் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக்கண் போன்றவற்றை போக்கும் குணம் உண்டு. கண் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மையைப் போக்கி கண் பார்வையை அதிகரிக்கிறது. 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்து தொந்தரவுக்கும் நிரந்தர முடிவுகட்ட காரட் உதவுகிறது.
கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாமல் கண்களை பாதுகாக்கும் காவலனாக காரட் எப்போதும் பயன்படும். காரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையாக்கும். முதுமையில் உண்டாகும் கண் நோய்களையும் குணப்படுத்தும்.
எலும்புகள் வலுவடைய:
எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலம் கொடுப்பவை. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இத்தகைய சத்துக்களை அதிகம் கொண்டது காரட். முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட காரட்டை உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலவீனம் குறைந்து பலப்படும்.
மலச்சிக்கல் தீர:
மலச்சிக்கலே மனிதனுக்கு நோயின் வாசலாகும். மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம். செரிமானக் கோளாறு ஏதும் வராமல் தடுத்து உண்ட உணவை செரித்து மலத்தை சீராக வெளியேற்ற போதுமான நார்ச்சத்து காரட்டில் உள்ளது. காரட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் மூலநோயின் தாக்கமும் குறையும்.
காரட்டின் மேல் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருகி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். வாய்வு தொந்தரவுகள் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறும். வாய் நாற்றம் நீங்கும்.
* காரட் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் இரும்பு சத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் கலந்து நச்சுக்களை வெளியேற்றும். இரத்த அழுத்ம், இதயநோய் அணுகாமல் காக்கும்.
* சருமத்திற்கு பொலிவைத் தரும்.
நரம்புகள் பலப்பட:
மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு மிகவும் ஊட்டசத்து மிக்க உணவாகவே காரட்டை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் இழப்பை சரிசெய்ய காரட் உதவுகிறது.
மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு காரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.
காரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளபக்கும்.
காரட்டில் தலைமுடி உதிர்வதை தடுக்கும் குணம் உள்ளதாக ஜெர்மன் பல்கலைக்கழக இயற்கை உணவு ஆராய்ச்சிக்கழகம் அண்மையில் கண்டறிந்துள்ளது.
குழந்தைகளுக்கு:
காரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து எடுத்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பெரியவர்கள்:
காரட்டை பசும் பாலில் அவித்து அதனோடு காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
காரட்டை நாமும் உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.
Comments
Post a Comment