பிள்ளைகள் ராத்திரில பல்ல கடிக்குதா
வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில், பந்தலில் படர்ந்திருந்த அவரைக் கொடியில், பூச்சி விழுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தாள் பாட்டி.
வயல் காட்டில் விவசாயம் செய்வதைப் போலவே, வீட்டுத் தோட்டத்தில் பயிர்க்குழி போடுவதிலும் பாட்டிக்கு அலாதி ஆர்வம்.
கிளர்த்திப் பண்படுத்தப்பட்ட மண்ணில், அவரை, சுரை, புடலை, பாகை, பீர்க்கன் என, அனைத்துவகைப் பயிர்க் கொடிகளுக்கான விதைகளையும், வெளியூர்களில் இருந்து வாங்கிவரச் செய்து, ஆடி பிறந்தவுடன் தவறாமல் பதித்து வைப்பாள்.
மண்ணைக் கீறிக் கொண்டு, ஒன்று, இரண்டு என பச்சைப் பசுந்தளிர்களாக, பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களைப்போல் ஒவ்வொன்றாக அவை முளைவிட்டு வெளிவரும் அழகை, நாள்தோறும் பார்த்துப் பூரிப்பாள்.
பின்னர் அந்தக் கொடிகள் ஒவ்வொன்றும் வளர்ந்து, படர்ந்து, பூத்துக் காய்க்கும் வரை அவள் கவனிப்பு ஓயாது.
இப்போதெல்லாம் பயிர்க்குழி போடும் பழக்கம் கிராமங்களிலேயே குறைந்துவிட்டது.
ஆனால் பாட்டி அதனை விடுவதில்லை. வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், கருவேப்பிலை வரை தோட்டத்திலிருந்தே கிடைத்துவிடும்.
அவரைக் கொடியில் ஒன்றிரண்டு இலைகள் பழுத்திருந்ததைப் பார்த்த பாட்டிக்கு ஒருவேளை பூச்சி எதுவும் விழுந்து விட்டதோ என அச்சம்.
மற்ற கொடிகளுக்கும் அது தொற்றிவிடுமே என்ற அச்சம். அவரையை ஆய்வு செய்த பின்னர், பூச்சி இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கும், வாசலில் யாரோ அழைப்பதற்கும் சரியாக இருந்தது.
அவசரமாக வந்து எட்டிப்பார்த்த பாட்டி, அங்கு வசந்தா தனது மகளுடன் வந்து நிற்பதைப் பார்த்தாள்.
“வாடியம்மா வசந்தா... என்ன மகளையும் கையோட கூட்டிக்கிட்டு வந்திருக்கே... பாட்டி மேல அவ்வளவு பாசமாக்கும்....”
பாட்டியின் செல்லக் கோபம் கலந்த வரவேற்புக்குப் பின் வீட்டிற்குள் வந்து அமர்ந்த வசந்தா, மகளைக் கவலையுடன் பார்த்தாள்.
“எங்க பாட்டி... அப்பப்ப உன்ன வந்து பார்க்கணும்னுதான் நினைக்கிறது. எங்கே நேரம் ஒழியுது. இப்ப இவ என்னடான்னா ராத்திரில தூங்கும் போது நரநரன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டே இருக்கா.. எழுப்புனா அப்போதைக்கு விட்டுட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் கடிக்க ஆரம்பிச்சுடுறா... அது மட்டுமில்ல படுக்கையிலேயே சிறுநீரும் கழிச்சுடுறா... இப்படி இருந்தா எபபுடி இவளுக்கு கல்யாணம் காச்சி பேசுறது... ஒண்ணுமே புரியலை... நீ தான் பாட்டி இதுக்கு ஏதாவது வழி சொல்லணும்..”
வசந்தா வருத்தத்துடன் சொன்ன வற்றையெல்லாம் பாட்டி கவனமாகக் கேட்டாள்.
“இதெல்லாம் பயப்படற அளவுக்கு பெரிய நோய் இல்லைடி அம்மா... நிறைய வயசுப் பொண்ணுகளுக்கு இந்த மாதிரிப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... மன ரீதியான காரணம்னு சிலர் சொல்லுவாங்க... அதுவும் இருக்கலாம்... ஆனா உடல் ரீதியாவே சில குறைகள் இருந்தால் தான் இது மாதிரிப் பிரச்சனைகள் வரும்... சத்துக்குறைவு, போதிய சாப்பாடு இல்லாதது, பசியில்லாம இருக்குறது, வெளிப்படுத்த முடியாத ஆத்திரம்... இப்படிப் பல காரணங்கள் இதுக்கு உண்டு... திருப்தியான உணவு, நிம்மதியான தூக்கம், பசியைத் தூண்டுமளவு செரிமானம்... இது மூணும் ஒழுங்கா இருந்தா இதெல்லாம் வராது... நான் சொல்றத கவனமா கேட்டுக்க.
அரைக்கீரை - 1 கைப்பிடி
வல்லாரை - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 5
பூண்டுப்பல் - 3
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கொத்தமல்லி - 1 கொத்து
இவைகள எடுத்து ஒண்ணாச் சேத்து சூப் மாதிரி செஞ்சு நாளைக்கு 2 வேளைக்கு குடுத்துக்கிட்டு வா.
அதோட, தானிய வகைகளயும், கீரைகளையும் தெனமும் சாப்பாட்டுல சேத்துக் கொடு. அதுலயும் உலர்ந்த பழ வகைகள கொடு. முக்கியமா காலை நேர சாப்பாட்ட மறக்காமக் கொடு.
படிக்கிற புள்ளைகள அதச்செய்யி இதச்செய்யின்னு தொந்தரவு பண்ணாத. அதுவே பிள்ளைகளுக்கு மன அழுத்தத்த கொடுக்கும். அப்புறம், அதிக நேரம் கண்முழிச்சி டிவி பாக்க விடாத. இது உனக்கும்தான்..
பாட்டி சொன்ன அறிவுரைகளைக் கேட்டுக்கொண்ட வசந்தா, மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றாள்.
Comments
Post a Comment