நம் நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கைக்கீரையும் ஒன்றாகும். முருங்கையை நம் வீட்டு மருத்துவர் என்றே சொல்லலாம். முருங்கைக் கீரையை ஏழைகளின் டானிக் என்கின்றனர்.
செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு-மறமே
நெருங்க யிலையொத்த விழி நேரிழையே நல்ல
முருங்கை யிலையை மொழி
- பதார்த்த குணபாடம்
பொருள் - முருங்கை இலையினால் அக்னி மந்தம், உடல்சூடு, தலைநோய், அழல் நோய், கண் நோய் ஆகியவை நீங்கும்.
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள்
உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. சுண்ணாம்புச்சத்தும் இரும்புச் சத்தும் மற்ற கீரைகளைவிட அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.
மருத்துவப் பயன்கள்
· முருங்கைக் கீரை, உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு வலு கொடுக்கிறது.
· இளைத்த உடலைத் தேற்றும் தன்மையுடையது.
· இதில் அதிகளவு இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்திருப்பதால் இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.
· செரிமானச் சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.
· மூல நோயின் பாதிப்பு குறைகிறது.
· மூக்கில் நீரேற்றம், தலைவலி போன்றவை ஏற்படாமல் தடுத்து சுவாசத்தை சீராக்குகிறது. · நுரையீரல் சளியைப் போக்குகிறது.
· வைட்டமின் ஏ இக்கீரையில் மிகுந்திருப்பதால் கண் பார்வையைத் தூண்டுகிறது.
· கண் நரம்புகளின் வறட்சியைப் போக்கி கண் எரிச்சல், கண் புகை, கண் காசத்தைப் போக்குகிறது. மேலும் கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.
· பித்த மயக்கம் மற்றும் மாந்தம் முதலியவற்றை நீக்குகிறது.
எப்படி சாப்பிடுவது
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு வதக்கி சாப்பிடலாம்.
முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வலி, கை கால் அசதி முதலியவை நீங்கும்.
முருங்கைக்கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
ஆண்கள் முருங்கைக்கீரையை நெய்யில் பொறித்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் வாலிபமும் வீரியமும் உண்டாகும்.
தாது விருத்தி உண்டாகும். இல்லற வாழ்க்கை இன்பமாகும்.
பெண்கள் இக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இரத்த சோகையைத் தடுக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு நன்றாக இருக்கும். மணமாகாத பெண்களுக்கு உண்டாகும் சூதக வயிற்று வலி இக்கீரையை சாப்பிட்டால் நீங்கும்.
Comments
Post a Comment