சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.12 ஆயிரத்து 740 கோடியாக அதிகரிப்பு
புதுடில்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது தான் முதன்முறையாக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்து தேசிய வங்கி, தங்கள் நாட்டு வங்கிகள் தொடர்பான வருடாந்திர கையேடு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் டெபாசிட் செய்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மூலம் டெபாசிட் செய்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இந்தியர்களின் டெபாசிட் அளவு கூடியுள்ளது. சுவிஸ் வங்கிகள், இந்தியாவைச் சேர்ந்த தங்களின் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் இது. இதில், இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்பது தெரியவில்லை. சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியர்களும், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும், மற்றவர்கள் பெயரில் டெபாசிட் செய்துள்ள பணம் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெறவில்லை. இப்படி கணக்கில் வராத பணம் குறித்த, அதிகாரப்பூர்வமான மதிப்பீடு எதுவும் இல்லையென்றாலும், அது, 90 ஆயிரம் கோடி முதல், 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், கடந்த 2006ம் ஆண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. ஆனால், 2010ம் ஆண்டில் இதில் மூன்றில் ஒரு பங்கிற்கு கீழ் குறைந்தது. 2011ம் ஆண்டில் 3,500 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது, 2010ம் ஆண்டின் முடிவில், சுவிஸ் வங்கிகள் இந்தியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை 9,295 கோடி ரூபாய். இவ்வாறு வருடாந்திர கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment