பொன்னியின் செல்வன் மூன்றாம் அத்தியாயம் விண்ணகரக் கோயில் சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது. "அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன். "குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன். "உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன் வேடிக்கைப் பிரியன். "அதையும் பார்த்து விடலாமடா!" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மன...