வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும், இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும் நமது லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிப்படாத ஒன்றாகவே உள்ளது. லட்சியம் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ,ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல.
உண்மையான இலட்சியம், திட்டமிடுவது, அதை அடைய கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன. நாம் அடைய வேண்டிய எல்லையும், நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது.
நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும். உங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்து போனது போனது தான், இனி திரும்ப வரப்போவது இல்லை.
இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம்.
இலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
இலட்சியம் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனையை போக்கும் ஒரு குறியீடு. இலட்சியத்தை முடிவு செய்வதைத் தள்ளிப் போடப் போட நீங்கள் அடைய வேண்டிய வெற்றிகளும் அனுபவிக்க வேண்டிய சுகங்களும் தள்ளிக் கொண்டே போகும்.
இலட்சியத்தை ஒரே நாளில் முடிவு செய்ய முடியாது தான். ஆனால் ஒரு சில நாட்களில், ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் முடிவு செய்து விடலாம். தனி மனித, சமுதாய ஆசைகளே இலட்சியங்களாக வளர்கின்றன மலர்கின்றன. தனிமனிதன் தனக்கு என்று தேடிக் கொள்பவைகளும் இலட்சியங்கள் தான்.
ஆனால் இந்த நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், சாதி வேறுபாடுகள் களையப்பட வேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்று தன்னை மறந்து இந்த நாட்டுக்காகவும் உலகுக்காகவும் பாடுபடுகின்றவர்களின் ஆசைகளும் இலட்சியங்கள் தான்.
தனிமனிதன் இலட்சியம் சிறப்பானவை என்றால் சமுதாய இலட்சியங்கள் மகத்தானவை என்று கூறலாம். ஒரு நாட்டிற்காக , உலக சமுதாயத்திற்காக இந்த இரு வகையான இலட்சியங்களும் தேவை தான். உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள் வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, கார் வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாகக் கொள்ளாதீர்கள்.
அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். நீங்கள் இதை விடவும் பெரிய லட்சியத்தைக் கொண்டிருங்கள். ஏனெனில், பெரும்பாலும் கார், பங்களா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது. அளவு கடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும். வாழ்வின் இலட்சியத்தை அடைய முயலுகிறவர்கள் வாழ்வே நீண்டதாகும்.
லட்சியத்தை அடைய செயல்கள் செய்தால் மட்டும் போதாது.
செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு இலட்சியமாக இருத்தல் வேண்டும்.
Comments
Post a Comment