எல்லாவற்றுக்கும் அடிப்படையானது நம்பிக்கை, அதிலும் சிறப்பு தன்னை நம்புவது ஆகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தித் தள்ளி விடுகிறதல்லவா. அதுபோலவே நம்மை இயக்குவது இந்த நம்பிக்கை என்ற சக்தி தான்.
சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இயற்கையிலே நாம் நம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம். காலப்போக்கில் அது நாம் அடையும் வெற்றியை வைத்து அதிகரிப்பதும் குறைவதுமாக வேறுபடுகிறது.
ஒருவன் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால் அது அவனுடைய கடிணமான பயிற்சியினால் சாத்தியம் ஆகலாம், ஆனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்தவன் விடாமல் போராடினால் அது அவனுடைய தன்னம்பிக்கையின் பலமாகவே இருக்கும். அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்து இருந்தால் தான் அது முன்னேற்றப் பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.
சிறிதளவு நம்பிக்கையை வைத்துக் கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம். முழுவதுமாக நிரம்பப் பெற்ற நம்பிக்கையோடு போராடினால் வெற்றியின் உச்சிக்கு எளிதில் சென்றுவிடலாம்.
சிலர் தாம் தவற விட்ட சில இலக்குகளை நினைத்தே வருந்திக் கொண்டு இருப்பார்கள். எப்போதும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்துவதை விடவும், சில நேரங்களில் நாம் சிறப்பாக செய்து முடித்து அதற்கு நமக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நினைத்துப் பெருமை கொள்கிற உற்சாக தருணங்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நம் உச்சம் என்ன, நம் பலம் என்ன என்பதை நமக்கே அது புலப்படுத்தும் நொடிகளாக அது அமையும். பிறருக்கான மனிதராக நீங்கள் இருப்பது உங்களை நீங்களே வீணடித்துக் கொள்வதற்குச் சமம்.
உங்களைப் பற்றிய கருத்தை நீங்கள் அடுத்தவரிடம் கேட்காதிர்கள் ஏனெனில் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அவர்களுக்கு தெரியாது. உங்கள் சக்தியின் மதிப்பு அவர்களுக்கு தெரியாது.
வரலாற்று வெற்றியாளர்கள் தங்களுடைய அறிவுகளால் வென்றதை காட்டிலும் தன்னுடைய தன்னம்பிக்கையினால் வென்றவர்களே அதிகம். அவர்கள் யாரும் அவர்களைப் பற்றிய கருத்துக்களை அடுத்தவரிடம் கேட்கவில்லை, தான் இப்படி தான் என்று அவர்களுக்கு அது நன்றாக தெரிந்து இருந்தது. அதுவே அவர்களை வெற்றியாலனாகவும் மாற்றியது.
முடிந்த வரை முயற்சிசெய் முடியாத வரை பயிற்சி செய்.
தெரிந்ததை துணிந்து செய் தெரியாததை அறிந்து செய்.
முதலில் உங்களை நீங்கள் உயர்வாக நினையுங்கள், அப்படிப்பட்ட எண்ணம் இல்லாதவர் தான் மற்றவரை உயர்வானவராகவும், தன்னை விட சிறந்தவராகவும் நினைத்துக் கொள்வார்.
இந்த எண்ணத்திற்க்கு பதிலாக நீங்கள் உயர்வாக நினைக்கிற அனைவருக்கும் எந்த வகையிலும் நீங்களும் சளைத்தவரில்லை என்ற எண்ணத்தை விதைத்துப் பாருங்களேன்!!
எப்போது இந்த பொதுவுடைமை மனநிலை வருகிறதோ, அப்போது உங்களின் உச்சம் உங்களுக்குப் புரியும். உங்கள் வெற்றிகளும் விரியும்.
Comments
Post a Comment