சில நிமிடம் தானே என்று உங்கள் நிமிடங்கள் வீணாவதை அலட்சியம் செய்யாதீர்கள். நிமிடங்களை வீணாக்குவது என்பது நம்மை நாமே சிறிது சிறிதாக வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள். நிமிடங்கள் தான் யுகங்களாக மாறுகின்றன.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலை மதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளைப் பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும். ஏனெனில் காலம் பொன் போன்றது.
உலகத்திலே நாம் எதை இழந்தாலும், மீண்டும் கிடைக்காதது நேரங்கள் மட்டுமே. இந்தக் காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளை வீணாக்காமல், அதன் ஒவ்வொரு மணித்துளியையும் பொன்னானது, என நினைத்து பயனுள்ளதாக்கினால் வெற்றி நமக்கு உறுதி.
ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு கணமும் உலகில் இயற்கையில் பல மாறுதல்கள் அதாவது அழிவுகளும், வளர்ச்சிகளும் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
அப்படி இயற்கை மாற்றத்தினால் ஏற்படும் அழிவுகளையும் நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது. இவையெல்லாம் நம் சக்திக்கு மீறி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவைகளைக் கட்டுப்படுத்த நமக்கு ஆற்றல் போதாது. இவைகளில் முக்கியமானது “காலம்” கடிகாரத்தை நிறுத்தலாம் ஆனால் காலத்தை நிறுத்த முடியுமா?
காலச் சுழற்சியை யாராலும் நிறுத்த முடியாது. ஒவ்வொரு வினாடியும் கடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தின் விளைவால் கழியும் மணித் துளிகள் விரயம் ஆவதை நாம் திட்டமிட்டு ஓரளவுக்கு உபயோகப்படுத்த முயன்றால் ஓரளவு காலத்தின் விரயத்தைத் தடுக்க முடியும்.
ஆகவே திட்டமிடுதல் மிக முக்கியமான ஒன்று. அது மட்டுமல்ல, நாம் நம் திட்டங்களை முறையாக வகுத்துக் கொள்ளாததனால் எவ்வளவு விரயங்களை சந்திக்கின்றோம் என்பதை நாம் அறியாமலே இருக்கிறோம். நம்முடைய அலட்சியத்தால், முறையான திட்டமிடுதல் இல்லாமையால் ஒரு நிமிடத்தை இழந்தால் கூட அதை எப்போதுமே திரும்பப் பெற முடியாது.
ஆகவே, ஒரு நிமிடம் தானே என்று அலட்சியப் படுத்த வேண்டாம். கடந்து போன, நீங்கள் இழந்த அந்த ஒரு வினாடி உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணத்தைத் தவறவிட்டது, விட்டது தான். வாழ்வின் உச்சிக்குச் சென்று இருக்க வேண்டிய வாய்ப்பை நம்மை அறியாமலே தவற விட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
இழந்தது ஒரு வினாடி என்றாலும் அதை மீண்டும் பெற முடியாது என்பதை உணர்கிறீர்களா? இனி ஒரு நிமிடத்தையும் வீணாக்காதீர்கள். கசப்பான உண்மை என்ன என்றால், நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை, ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு நிமிடத்திலும் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வினாடியிலும் காத்து இருக்கிறது.
எந்த நிமிடத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், நமக்கும், இந்த சமுதாயத்திற்கும் நன்மை தரும் வகையில் கழிப்பது நமது கடமையாகும். உங்களது வேலையை தள்ளிப் போடாமல் உடனே சரியான நேரத்தில் காலம் தாழ்த்தாமல் செய்யுங்கள். இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.
Comments
Post a Comment