வாழ்க்கையின் வெற்றி எதில் இருக்கிறது? செல்வத்திலா? செல்வாக்கிலா? படிப்பிலா? உயர் பதவியிலா? இதில் எதிலும் அது இல்லை!
அவைகள் உங்களுக்கு வசதிகளையும், நல்வாய்ப்புகளையும் தேடித் தர பயன்படலாம். அதனால் மட்டும் உங்கள் வாழ்க்கை நிறைவடைந்து வெற்றி அடைந்து விடாது.
அவைகள் எல்லாம் கிடைத்த பிறகும் உங்கள் மனசு மீண்டும் தேடி அலைந்து கொண்டே தான் இருக்கும். அது எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தால் அதற்க்கான விடை இதுவாகத்தான் இருக்கும்.
மன அமைதியை அதாவது நிம்மதியை!
நிம்மதி தான் மனித வாழ்க்கைக்கு நிறைவு தரக்கூடியது!
வாழ்க்கையில் நிம்மதியை மொத்தமாக எதைக் கொடுத்தும் வாங்கிக் கொள்ள முடியாது, அது சிறு சேமிப்பு போன்ற ஒரு விஷயம். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அதைத் தேடி சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அது இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கலாம் ஏன் நீங்கள் கூறும் ஆறுதலாகக்கூட இருக்கலாம்.
பல சான்றோர்கள் கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று சொல்வார்கள், ஆம், கடவுள் நமக்குள், தன் பிரதிநிதியை வைத்துத் தான் ஒவ்வொரு மனிதனையும் படைக்கிறான்.
அந்தப் பிரதிநிதி நம் உயிர் பிரியும் வரை, ஒரு வினாடி கூடத் தூங்காமல் விழித்துக் கொண்டு, எது தர்மம், எது நியாயம் என்று நமக்கு வழி காட்டிக் கொண்டு தான் இருக்கிறான். அந்த பிரதிநிதியின் பெயர் தான் மனசாட்சி...
எப்பொழுது நாம் நம் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறோமோ அப்பொழுதே நம் மனசில் ஒரு சுமை ஒரு பாரமாக ஏற்றப்படுகிறது. நாம் வாழ்நாள் முழுவதும் பல சுமைகளை பாரங்களாக ஏற்றிக் கொண்டே போகிறோம்.
நம் மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகப்போக நம் மனது சுமை தாங்காமல் மன அழுத்தத்தை அதிகமாக்கிக் கொண்டே போகும். மன அழுத்தம் ஒரு கொடிய நோய்... அதற்கு சரியான மருந்து கிடையாது.
அந்த மன அழுத்தம் ஒரு பாதுகாப்பற்ற மனோநிலையை உங்களுக்குள் உருவாக்கி, உங்கள் மன நிம்மதியைப் போக்கி விடும், நம் வாழ்க்கையில் நாம் எதை தேடிக் கொண்டாலும் நிம்மதியில்லாமல் நம்மை வேதனையில் தள்ளி விடும்.
யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று தெரிந்தே நாம் நம் மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு சுமை தான். வாழ்நாள் முழுவதும் இப்படி நிறைய சுமைகளை நாம் ஏற்றிக் கொண்டே போகிறோம்.
எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நாம் பணத்தை சிறு சேமிப்பாக சேமித்துக் கொண்டே போகிறோமோ, அதே போல் நம் வாழ்க்கையில் மனசாட்சி தவறு என்று சுட்டிக் காட்டும் தவறுகளை எல்லாம் அதாவது அந்தப் பாவ சுமைகளை எல்லாம் சேர்த்துக்கொண்டே இருக்கும். அதை பத்திரமாக சேமிக்காமல், அவ்வப்பொழுது இறக்கி வைத்துக் கொண்டே போக வேண்டும்.
மனசில் சுமை இல்லாவிட்டால்...மன அழுத்தம் இருக்காது...
மன அழுத்தம் இல்லா வாழ்க்கை சொர்க்கமே...
Super
ReplyDelete