ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.
ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது. அதற்கு அவர் எனக்கு முழு விபரம் தெரியாது.
தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.
ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.
பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.
முடிவாக,
அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்...... இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது. “நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்று நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று.
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
Comments
Post a Comment