ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.
"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான். அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார். இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குணிந்தான்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
இன்று நாமும் இதுபோலத் தான் பல இடங்களில் அவதூறு பேசி அடுத்தவர் மனதை காயப்படுதுகிறோம், அடுத்தவரிடம் பழகும்போது எக்காரணம் கொண்டும் அவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாதீர்கள், இந்த சின்ன விசயத்துக்கு போய் கோவித்துக் கொள்ளலாமா என்றெல்லாம் எண்ணாமல் நல்ல வார்த்தைகளை பேசுங்கள். அடுத்தவர் மனதை புண் படுத்தும் புன்னகையைக்கூட தவிர்த்து விடுங்கள். நமக்கு சிறிதாக தெரியலாம் ஆனால்அடுத்தவர்களுக்கும் அவ்வாறே இருக்க வேண்டும் என்ற அவசியம் தேவை இல்லை.
சில நேரங்களில் நம் மனதுக்கு பிடித்தவர்களைக் கூட பிரிந்துவாழ நேரலாம், ஆதலால் பேசும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருங்கள்.
Comments
Post a Comment