முன்னொரு காலத்தில் பள்ளியில்
நிறைய மாணவர்கள் பயின்று வந்தார்கள் அப்பொழுது வெளியூரிலிருந்து புதிதாய் ஒரு
மாணவன் வந்தான் அந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் சந்திரன். அறிவிலும், பயபக்தியிலும், அடக்கத்திலும் சிறந்து
விளங்கிய அவனை ஆசிரியர்கள் பெரிதும் நேசித்தார்கள்.
இதனால் மூத்த மாணவர்கள்
பொறாமைப்பட்டனர். எப்பொழுது பார்த்தாலும் சந்திரனைப் பற்றி தலைமை ஆசிரியரிடம்
ஏதேனும் புகார் சொல்லி, கோள் மூட்டிக்கொண்டே இருந்தனர். சந்திரனை விரட்டியடிக்க பல
சூழ்ச்சிகள் செய்தனர்.
மூத்த மாணவர்களுக்கு சரியான
பாடம் புகட்ட முடிவு செய்த ஆசிரியர் ஒருவர் , ஒருநாள் எல்லா மாணவர்களையும் அழைத்தார். “அன்புச்
செல்வங்களே! உங்கள் அறிவாற்றலுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் வெற்றி
பெறுபவர் என் வாரிசாவார்” என்றார்.
எல்லா மாணவர்களும்
போட்டிக்குத் தயார் ஆயினர். அவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனித
பொம்மைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து
சொல்லும்படி தலைமை ஆசிரியர் ஆணையிட்டார்.
மூத்த மாணவர்கள் ஒவ்வொருவராக
வந்து பொம்மைகளைப் பல கோணங்களில் பார்த்தனர்; யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நீண்ட நேரம்
ஆய்வு செய்த பின்னரும் சிறந்த பொம்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் ஆசிரியரிடம்
தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
இப்பொழுது சந்திரனனின் முறை!
அவன் மெல்லிய, நீண்டதொரு கம்பியைக் கொண்டு வந்து முதல் பொம்மையின் காதில்
நுழைத்தான். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளியானது. இரண்டாவது பொம்மையின்
காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில்
நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது.
மூன்றாவது பொம்மையே சிறந்த
பொம்மை என அறிவித்து, அதற்கான காரணத்தையும் சந்திரன் சொன்னான்! முதல் பொம்மை எந்த
அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும். இரண்டாவது
பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத்
திருத்திக் கொள்ள முயலாது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை ஜீரணித்து தன் வாழ்வை சீர் செய்துகொள்ளும் சீர்மை
மிக்கது. ஆகவே மூன்றாவது பொம்மையே சிறந்தது.”
மாணவன் சந்திரனனின்
விளக்கத்தைக் கேட்டு தலைமை ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார். பொறாமைப்பட்ட மூத்த மாணவர்கள்
வாயடைத்துப் போயினர்.
நமக்குன்னு என்ன வருதோ அதை நாம் சிறப்பாக செய்வோமேயானால் நமக்கு பொறாமை குணமே வராது மாறாக அன்பே நிறைந்திருக்கும். ஆகவே பொறாமை தவிர்ப்போம் அன்பு செய்வோம்.
Comments
Post a Comment