*"குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்."*
பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால்.
தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது.
இதனால்தான் குறைந்தது 10 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே.
என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது.
சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.
மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.
குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது.
குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம். தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.
எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது?
பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு?
எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம். தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான்.
எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும். சத்தான காய்கரிகளுடன் தானியவகைகளையும் சேர்த்து உண்ணலாம். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 10 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
*"வீரமும் அறிவும் பெற்று ஆரோக்யமாக வளர நம் குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்."*
Comments
Post a Comment