பொன்னியின் செல்வன் முப்பத்தொன்றாம் அத்தியாயம் "திருடர்! திருடர்!" விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹாவீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம். மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்திரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தல சிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள். முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திரு...