பொன்னியின் செல்வன் முப்பத்திரண்டாம் அத்தியாயம் பரிசோதனை சின்னப பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து , " தளபதி! நல்ல சமயத்தில் தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். இந்தப் பக்காத் திருடர்கள் என்னுடைய உடைமைகளைத் திருடிக் கொண்டதுமல்லாமல் , என்னையும் கொல்லப் பார்த்தார்கள்! விருந்தாளியை இப்படித்தானா நடத்துவது ? இதுவா தஞ்சாவூர் சம்பிரதாயம் ? நான் தங்களுக்கு மட்டும் விருந்தாளியல்ல , சக்கரவர்த்திக்கும் விருந்தாளி ; சக்கரவர்த்தினி சொன்னதைத்தான் தாங்களும் கேட்டீர்களே! பட்டத்து இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்த தூதன். அப்படிப்பட்ட என்னை இந்தப் பாடுபடுத்துகிறவர்கள் மற்றவர்களை என்ன செய்து விட மாட்டார்கள்! இப்படிப்பட்ட திருடர்களைத் தங்கள் பணி ஆட்களாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறுகாரியம் பார்ப்போம்!" என்று சரமாரியாய்ப் ப...